கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் காஷ்மீர் சட்டமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என மூன்று கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தலை காஷ்மீர் மக்களுடன் உள்ளூர் கட்சிகளும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

jk

ஜம்மு- காஷ்மீரில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 25 தொகுதிகளை வென்ற பா.ஜ.க.வும், 28 தொகுதிகளை வென்ற பி.டி.பி. கட்சியின் மெஹ்பூபா முப்தியும் தேர்தலுக்குப் பின் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் கள். அந்தத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 15 தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி 12 தொகுதியிலும் வென்றன. ஆனால் பா.ஜ.க.வுக்கும் பி.டி.பி.க்கும் இடையே இணக்கம் சரிவர அமையாத நிலையில், மெஹ்பூபாவுக்கு வழங்கிவந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப்பெற்றது. 2018 ஜூனில் மெஹ் பூபா அரசு கவிழ்ந் தது. கத்துவா கற்பழிப்பு வழக் கில் பா.ஜ.க.வின் செயல்பாட் டால் கட்சிப் பெயர் சீர்கெட்டதால், இந்த முறிவால் மெஹ்பூபாவும் நிம்மதியாகவே உணர்ந்தார்.

Advertisment

2019 மக்களவைத் தேர்தலில் ஜெயித்து வந்த பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த முதல் பாராளு மன்றக் கூட்டத்திலேயே, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து, மாநில தகுதி போன்றவற்றைப் பறித்து அதனை யூனியன் பிரதேசமாக மாற்றியது.

காஷ்மீர் முழுவதும் முன்பைவிட அதிகமாக ராணுவம் குவிக்கப்பட்டு காஷ்மீர் தலைவர்கள், பிரபலங்கள், பத்திரிகை யாளர்கள் என பலரும் ஓராண்டுக்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இன்டர்நெட் முடக்கப்பட்டது. தேர்தலுக்குப் பதில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.

ஒருவேளை தேர்தல் நடத்தினால், தனக்குச் சாதகமாக இருக்கும்படி முஸ்லிம்கள் பெரும்பான்மையுள்ள தொகுதிகளை மறுசீரமைப்பு என்ற பெயரில் மாற்றி யமைத்தது. தவிரவும் 83 தொகுதிகள் 90 தொகுதிகளாக உயர்த் தப்பட்டன.

Advertisment

jk

ஜம்மு- காஷ் மீரில் இயல்பு நிலை நிலவுவதாக பா.ஜ.க. கூறிக்கொண்டாலும், எல்லையோர தீவிரத் தாக்குதலோ, அதில் இறக்கும் இந்திய வீரர்கள் எண்ணிக்கையோ குறைவதாக இல்லை. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜம்மு- காஷ்மீர் தேர்தல் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், 2024 டிசம்பருக்குள் காஷ்மீரில் தேர்தலை நடத்தியாகவேண்டும் என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதன்படியே தற்சமயம் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெறப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளன. 1987-க்குப் பின் இப்போதுதான் தேர்தலுக்கு முன்பே இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கின்றன. ராகுல்காந்தி காஷ்மீருக்கு வருகைதந்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லாவுடன் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார். மீண்டும் மாநில அந்தஸ்து, சிறப்பு அந்தஸ்து போன்றவை இக்கட்சிகளின் முக்கிய தேர்தல் அறிக்கையாக இருக்கும்.

அதேசமயம் மக்கள் ஜனநாயகக் கட்சி எனப்படும் பி.டி.பி. கட்சியும் காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணிக்குத் தயார் என்று தங்கள் மனநிலையைத் தெரிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸுக்கும்- தேசிய மாநாட்டுக் கட்சிக்குமே எத்தனை தொகுதி, எந்தத் தொகுதி என்பதில் நெருக்கடி நிலவுவதால், மூன்று கட்சி கூட்டணி அமையும் என்பதில் நிச்சயமில்லை.

jk

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் -தேசிய ஜனநாயகக் கட்சிக் கூட்டணி 41.7 சதவிகித வாக்கைப் பெற்றது. பா.ஜ.க. 17 சதவிகித வாக்கும், பி.டி.பி. கட்சி 8 சதவிகித வாக் கும் பெற்றன. இப்போது காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டாகத் தேர்தலைச் சந்திக்குமெனில் பா.ஜ.க.வுக்கான வெற்றிவாய்ப்பு குறைவுதான்.

87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப் பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்த லில், பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப் போகிறதா?…இல்லை கூட்டணியமைத்துக் களம் காணப் போகிறதா?… பா.ஜ.க.வுடன் எந்தக் கட்சியெல்லாம் கூட்டணிக்கு வரப்போகிறது? சிறப்பு அந்தஸ்து நீக்கமும், மாநில அந்தஸ்து நீக்கமும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதகமாக அமையுமா? என்பதெல்லாம் முக்கிய கேள்விகள்.

தொகுதி மறுவரையறையும், சமீபத்தில் காஷ்மீர் முழுவதும் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதும் பா.ஜ.க.வுக்கு ஓரளவு துணைசெய்யலாம். சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை பா.ஜ.க. தனது முக்கிய தேர்தல் முழக்கமாக முன்வைக்குமா என்பது தற்போதைக்குத் தெளிவாகவில்லை.

காங்கிரஸிலிருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத், சமீபத்தில் தனது ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. அதனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சல்மான் நிஜாமி மறுத்துள்ளார்.

இதனால் தனியாகப் போட்டியிட்டு காங்கிரஸின் வாக்குகளைப் பிரிப்பாரா? இல்லை நேரடியாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணியமைத்து ஆதரவளிப்பாரா? என்பதுகுறித்து களத்தில் இன்னும் எந்தத் தெளிவும் ஏற்படவில்லை. அடுத்த வாரம் முதல் காஷ்மீர் குளிரையும் தாண்டி களநிலவரம் சூடுபிடிக்கத் தொடங்கும்.